Pages

Sunday, April 25, 2010

16வது சார்க் உச்சி மாநாடு புதனன்று ப+ட்டானில் ஆரம்பம்


16 வது சார்க் உச்சி மாநாடு நாளை மறுதினம் பூட்டான் தலைநகரான திம்புவில் ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை தூதுக்குழு இன்று பூட்டான் புறப்பட்டுச் செல்கிறது.
சார்க் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு இதுவாகும். அமைப்பின் முதலாவது உச்சிமாநாடு பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் 1985 டிசம்பரில் நடைபெற்றது. 16 வது உச்சி மாநாடு நாளை மறுநாள் பூட்டானில் ஆரம்பமாகிறது. பூட்டான் உச்சிமாநாட்டை பொறுப்பேற்று நடத்துவது இது முதல் முறையாகும்.
சார்க் அமைப்பின் தலைமைப் பதவியை தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகித்து வருகின்றார்.
16 வது உச்சி மாநாட்டை தலைமை வகித்து நடத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு புறம்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் வெளிநாட்டமைச்சர்களின் பேச்சுவார்த்தை மற்றும் ஏனைய செயற்பாடுகளில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்குபற்றுவார். வெளிநாட்டமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்குபற்றும் முதலாவது நிகழ்வு இதுவாகும். தனது பூட்டான் விஜயத்துக்கு முன்பதாக ஊடகவியலாளர்களை அமைச்சர் பீரிஸ் நேற்று சந்தித்தார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் இலங்கை மேற்கொண்ட செயற்பாட்டு அணுகுமுறையை இதே போன்ற பிரச்சினையை எதிர்நோக்கும் ஏனைய பிராந்திய நாடுகள் பாடமாக எடுத்துகொள்ளலாம். இலங்கையின் அணுகுமுறை ஏனைய பல நாடுகளுக்கு நல்லதொரு படிப்பினையாக அமையும் என்று ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் பீரிஸ் கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
சார்க் அமைப்பு உண்மையிலேயே மக்கள் மையப்படுத்தப்பட்ட அமைப்பாக உருவாக வேண்டிய காலம் வந்து விட்டது. இந்நிலையில் கடந்த 25 வருடங்களுக்கு பின்னரான தற்போதைய நிலையை பற்றி ஆராய சார்க் அமைப்புக்கு இது நல்லவொரு சந்தர்ப்பமாக அமைகிறது.

எதிர்கால சவால்கள், மாற்றப்பட வேண்டிய விடயங்கள், பிராந்திய சேவைக்காக முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயங்கள் ஆகியவை பற்றி தற்போது ஆராயலாம்.
தமது நலன் பேணுவதற்கு சார்க் அமைப்பு நேரடியாக தொடர்புள்ளது என்று பிராந்திய மக்கள் நினைக்கும் அளவுக்கு அமைப்பின் செயற்பாடுகள் அமைய வேண்டும். பொருளாதார நடவடிக்கை மூலம் கிடைத்த லாபங்களை அனைத்து தரப்பினரிடையிலும் சமமாக பகிர்ந்தளிப்பதில் பிராந்திய நாடுகள் அதிக அக்கறை காட்டவேண்டும்.
அத்துடன் பிராந்திய நாடுகளுக்கு தேவையேற்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வளங்களை சேமித்தல் மற்றும் சூழல் விவகாரங்கள் பற்றி தீர்க்கமாகப் பேசப்படவேண்டும். இந்த வகையில் இலங்கை அண்மையில் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் பெற்றுக்கொண்ட வெற்றிகள் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உச்சி மாநாட்டை ஒரு மேடையாக பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment


Followers